கொரோனா ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்த பொதுமக்கள்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்ப்பு


கொரோனா ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்த பொதுமக்கள்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 3 July 2020 12:15 AM GMT (Updated: 2020-07-03T04:50:18+05:30)

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 100-வது நாளை பொதுமக்கள் துக்க நாளாக அனுசரித்தனர். இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று 100-வது நாளை அடைந்தது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பலரும் வீட்டு சிறையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். இயல்பு வாழ்க்கையை தொடர முடியாமல் 4 சுவற்றின் உள்ளேயே வலி மிகுந்த நாட்களை நகர்த்துகிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே சிலர் அவ்வப்போது வெளியே வருகிறார்கள்.

இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகள் வாகனங்கள் இன்றி அமைதி பூங்காவாக காட்சியளிக்கிறது. அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே கடைகள் திறந்து வைத்திருப்பதால், அந்த சமயத்தில் மட்டுமே மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்களின் நடமாட்டம் இருக்கிறது. பிற்பலுக்கு பின்னர் பாலைவனம் போல வெறிச்சோடி கிடக்கிறது.

வலியையும், வேதனையையும், பயத்தையும் போதித்த கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, சதம் அடித்ததை பெரம்பூரில் உள்ள ஒரு குடும்பத்தினர் 100 என்று எழுதிய எண்களை வீட்டில் இருந்தபடியே காண்பித்தனர். இதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்த பலரும் ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்தனர். இதுவரை தாங்கள் பட்ட கஷ்டத்தை வேதனையோடு சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தனர்.

ஊரடங்கின் காரணமாக வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடூரமான நாட்களை பெரும்பாலானவர்கள் சந்தித்ததே இல்லை. கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத கொடூர அரக்கன் தமிழகத்தில் இருந்து துளியும் இன்றி ஓயும் வரை மகிழ்ச்சி ஒருபோதும் ததும்பாது. அந்த நாட்களை எதிர்நோக்கி பொதுமக்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அதற்காக காத்திருக்கவேண்டியது உள்ளது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Next Story