கொரோனா தொற்று பாதிப்பு: கட்டுப்பாட்டு பகுதிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு


கொரோனா தொற்று பாதிப்பு: கட்டுப்பாட்டு பகுதிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2020 5:30 AM IST (Updated: 3 July 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டுப்பாட்டு பகுதிகள்

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டி ஊராட்சி கக்கன் காலனி, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கியிருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளை சுற்றி கட்டுப்பாட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளதையும், கட்டுப்பாட்டு பகுதிகளையும் சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அலுவலர்களிடம் அவர் விசாரித்தார்.

சாய் பயிற்சி மைய விடுதியில் ஆய்வு

மேலும் கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையை அடுத்து தனிமைப்படுத்தப்படுபவர்கள் தங்க வைப்பதற்காக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாய் பயிற்சி மைய விடுதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கும் விடுதி, அயோத்தியாப்பட்டணம் வைஸ்யா கல்லூரியில் உள்ள மகளிர் விடுதி ஆகியவற்றை அதிகாரிகள் தயார்படுத்தி உள்ளனர்.

இந்த தங்கும் விடுதிகளையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்படுபவர்களை தங்கவைப்பதற்கான படுக்கை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்த வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) வீர் பிரதாப் சிங், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நிர்மல்சன், சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பார்த்தீபன், தாசில்தார்கள் சேலம் கோபால கிருஷ்ணன், வாழப்பாடி ஜானகி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், அன்புராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சி.சிவரஞ்சன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story