சுற்றுலா பயணிகள் வராததால் கம்பளி ஆடைகள் விற்பனை மந்தம் வியாபாரிகள் பாதிப்பு


சுற்றுலா பயணிகள் வராததால் கம்பளி ஆடைகள் விற்பனை மந்தம் வியாபாரிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 3 July 2020 5:05 AM IST (Updated: 3 July 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகள் வராததால் கம்பளி ஆடைகள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு, அனைத்து வகையான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஊட்டி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது. கடைகள் திறப்பு நேரம் மாலை 6 மணி வரை என அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கம்பளி ஆடைகள்

இதற்கிடையில் ஊரடங்கால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்பு கடைகள் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே இருக்கிறது. இருந்தாலும், ஊட்டி சேரிங்கிராசில் கம்பளி ஆடைகள், சாக்லேட் விற்பனை கடைகள் திறந்து செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை போக்கவும், உடலை சூடாக வைத்துக்கொள்ளவும் கம்பளி ஆடைகள், தொப்பிகளை வாங்கி அணிவார்கள். பருவமழை காலத்தில் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வாங்குவதும் உண்டு.

வெறிச்சோடிய கடைகள்

இந்த ஆண்டு அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வராததால் கம்பளி ஆடைகள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கடைகளை திறந்து வைத்தும், வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உள்ளூர் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை வாங்க மிகவும் குறைந்த அளவே வருகின்றனர். இதனால் கடைகள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.

வருமானம் இல்லை

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

சுற்றுலா நகரமான ஊட்டியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் நடைபாதை வியாபாரிகள், நகர்வு கடைகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் வராததால் கடைகள் திறந்திருந்தும் வர்க்கி, பிஸ்கட், சாக்லேட், கம்பளி ஆடைகள் போன்றவை விற்பனையாகாமல் உள்ளது. குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. இதனால் புதியதாக ஆர்டர் செய்யாமல் உள்ளோம். வியாபாரம் இல்லாததால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story