கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 4 மண்டல பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் தகவல்


கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 4 மண்டல பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 3 July 2020 5:08 AM IST (Updated: 3 July 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம், 

கொரோனா தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இ-பாஸ்

கொரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலுள்ள 60 கோட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிருந்து மருத்துவ சிசிச்சை, திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அரசின் அனுமதியுடன் (இ-பாஸ்) வரக்கூடியவர்களின் விவரங்கள், மாநகர பகுதிகளில் காவல் துறையின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தினை வசிப்பிடமாக கொண்டு, வேலை நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு, முடிவுகள் வரபெற்ற பின்னரே மாநகர பகுதிகளுக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உரிய அனுமதி இல்லாமல் வருபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வீடு, வீடாக...

சேலம் மாநகர பகுதிகளிலுள்ள அனைவரின் பாதுகாப்பு நலன் கருதி வீடு, வீடாக சென்று வீட்டில் இருப்பவர்கள் விவரம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். வீடுகளுக்கு வருகை தரும் சேலம் மாநகராட்சி களப்பணியாளர்கள் வீட்டில் இருப்பவர்களின் பெயர், வயது, தொலைபேசி எண், வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை பதிவு செய்வார்கள்.

சேகரிக்கப்படும் விவரங்களை கொண்டு பொதுமக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும். குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக களப்பணியாளர்களிடமோ அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் 0427-2212844 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வதற்காகவோ அல்லது பிற பணிகளுக்காக தங்களது வீடுகளுக்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வரக்கூடியவர்களின் விவரங்களை பொதுமக்கள் கண்டிப்பாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் தெரிவித்திட வேண்டும்.

எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் உரிய அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மேற்கண்ட விவரங்களை எவ்வித விடுதலுமின்றி சரியான முறையில் தெரிவித்து, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story