பழனி அருகே குடிமராமத்து பணி: பட்டிக்குளத்தில் பழமையான ஷட்டர் அகற்றம்


பழனி அருகே குடிமராமத்து பணி:   பட்டிக்குளத்தில் பழமையான ஷட்டர் அகற்றம்
x
தினத்தந்தி 3 July 2020 5:21 AM IST (Updated: 3 July 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

பட்டிக்குளத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பழனி, 

பழனி அருகே கணக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பட்டிக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழை காலத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, பொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 எக்டேரில் விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், கத்தரி, தக்காளி உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 போர்களில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷட்டர் பழுதடைந்த காரணத்தால் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீர் குளத்தில் தேங்காமல் வெளியேறிவிடுவதாகவும், மன்னர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான ஷட்டரை அகற்றிவிட்டு, புதிய ஷட்டர் பொருத்தும்படி பட்டிக்குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளத்தை சீரமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது குளத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் குளத்தை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இந்த பணிகள் பட்டிக்குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகளின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து காத்திருந்த நிலையில் தற்போது குளத்தில் விரைவாக வேலை நடைபெறுவதால் மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story