வேலூரில் மின்சாதன பொருள் குடோனில் திடீர் தீ விபத்து


வேலூரில் மின்சாதன பொருள் குடோனில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 3 July 2020 12:00 AM GMT (Updated: 2 July 2020 11:51 PM GMT)

வேலூரில் மின்சாதன பொருள் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

வேலூர்,

வேலூரில் மின்சாதன பொருள் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடோனில் தீ

வேலூர் சேண்பாக்கம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஒரு வீட்டில் வடமாநில இளைஞர்கள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். இந்த இளைஞர்கள் பழுதடைந்த டி.வி., கம்ப்யூட்டர் உள்பட மின்சாதன மற்றும் மின்னணு சாதன பொருட்களை சேகரித்து, அவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்பதை தொழிலாக செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்கள் தங்கிருந்த வீட்டின் ஒரு பகுதியை குடோனாக பயன்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்தக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மின்சாதன மற்றும் மின்னணு சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிகளவு கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட வடமாநில இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

தீயணைப்புத்துறையினர் விசாரணை

இதுகுறித்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 40 நிமிடம் போராட்டத்துக்கு பின்னர் முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. அதில், குடோனில் இருந்த மின்சாதன மற்றும் மின்னணு சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

தீ விபத்துகான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினர் விசாரித்தனர். அதில், அந்தப் பகுதி சிறுவர்கள் சிலர், வயர்களில் உள்ள செம்பு கம்பிகளை எடுப்பதற்காக தீ வைத்ததில் குடோனில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Next Story