சோதனை சாவடிகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் மெகராஜ் உத்தரவு


சோதனை சாவடிகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் மெகராஜ் உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2020 12:25 AM GMT (Updated: 3 July 2020 12:25 AM GMT)

கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடிகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல், 

கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடிகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடிகளை உதவி கலெக்டர்கள், துணை கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். சோதனை சாவடிகளின் அருகில் அமைக்கப்பட்டு உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், தேவையான அளவு குடிநீர் உள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? என்பதையும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் வைட்டமின், ஜிங்க் மாத்திரை எடுத்துக்கொள்ளவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும் அறிவுறுத்த வேண்டும்.

கொரோனா இல்லாத மாவட்டம்

உள்ளாட்சி நிர்வாகத்தினர் தங்கள் பகுதிக்கு புதிதாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகின்றார்களா? என்று பொதுமக்கள் மூலம் கண்காணித்து விவரங்களை சுகாதாரத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உடனுக்குடன் தெரியபடுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களும் இணைந்து நாமக்கல் மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், உதவி கலெக்டர்கள் கோட்டை குமார், மணிராஜ் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story