மேகமலை வனச்சரக அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மேகமலை வனச்சரக அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்திராநகர், அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் பீன்ஸ், எலுமிச்சை, தக்காளி உள்ளிட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது. மலைக்கிராம விவசாயிகள் விளை பொருட்களை லாரி, வேன் போன்ற வாகனங்களில் ஏற்றி தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் மலைக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வனப்பகுதியை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்திராநகர் மலைக்கிராமம் வரை மட்டுமே லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் உத்தரவிட்டனர். அதற்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவின் காரணமாக இந்திராநகர் கிராமத்தை கடந்து அமைந்துள்ள விவசாய நிலங்களில் இருந்து விளை பொருட்களை சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே இதுதொடர்பாக விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் வாகனங்கள் செல்ல தடை நீக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து நேற்று மாவட்ட விவசாய சங்க தலைவர் கண்ணன், கடமலை-மயிலை ஒன்றிய விவசாய சங்க செயலாளர் போஸ் ஆகியோர் தலைமையில் இந்திராநகர் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடமலைக்குண்டுவில் உள்ள மேகமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், வாரத்தில் 3 நாட்கள் வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்று விளை பொருட்களை ஏற்றி செல்லலாம் என தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி வனத்துறையினர் தற்போது வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படையும் நிலை உள்ளதால் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கு பதில் அளித்து வனச்சரகர் கூறுகையில், மாவட்ட வனத்துறையினர் அனுமதியில்லாமல் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார். இதைத்தொடர்ந்து உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என கூறி விவசாயிகள் சமூக இடைவெளியுடன் மேகமலை வனச்சரக அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் மற்றும் கடமலைக்குண்டு போலீசார் மேகமலை வனச்சரக அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மலைக்கிராமங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாதைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும், விவசாய நிலங்களுக்கு செல்ல புதிய பாதைகளை உருவாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் இந்திராநகர் கிராமத்தை கடந்து வாகனங்கள் செல்ல வனச்சரகர் உத்தரவிட்டார். இதனையடுத்து 5 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story