கொரோனாவால் வேலையின்றி தவிக்கும் கைத்தறி நெசவாளர்கள்


கொரோனாவால் வேலையின்றி தவிக்கும் கைத்தறி நெசவாளர்கள்
x
தினத்தந்தி 3 July 2020 2:14 AM GMT (Updated: 3 July 2020 2:14 AM GMT)

கொரோனாவால் வேலையின்றி கைத்தறி நெசவாளர்கள் தவித்துவருகின்றனர்.

காரைக்குடி,

செட்டிநாடு என்றாலே முதலில் கட்டிட கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக செட்டிநாடு உணவு வகைகளும், செட்டிநாட்டு பகுதியில் தயாராகும் கைத்தறி சேலை ரகங்களும் இந்த பகுதியை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. காரைக்குடி பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரியமாக செய்யப்பட்டு வரும் இந்த தொழில் நூற்றாண்டை கடந்து தற்போது தனி மவுசை பெற்று வருகிறது. இந்த தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து பிரமாண்ட வீடுகளை பார்வையிட்டு செட்டிநாட்டு உணவுகளை சாப்பிட்டு, இங்கு கைத்தறி மூலம் தயாராகும் செட்டிநாட்டு சுங்கடி சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகளின் ரகம் மற்றும் அவற்றின் தரம் ஆகியவற்றை அறிந்து நேரடியாக சேலைகளை வாங்கி சென்று வந்தனர். ஆண்டுதோறும் இவர்களின் வியாபாரம் சூடுபிடித்து வந்தது. தற்போது கொரோனா தாக்கத்தால் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கானாடுகாத்தான் பகுதியில் கைத்தறி நெசவு தொழிலை நடத்தி வரும் வெங்கட்ராமன் என்பவர் கூறியதாவது:- கைத்தறி வைத்து செட்டிநாட்டு கைத்தறி சேலைகளை தயார் செய்து வருகிறேன். இதற்கு முன்பு 100 பேர் வரை என்னிடம் வேலை செய்து வந்தனர். தற்போது கொரோனாவால் இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு 15 பேர் மட்டும் தான் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர ஏற்கனவே இங்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் சேலைகள் தேக்க நிலையில் உள்ளன. இதுதவிர இதன் உபரி பொருட்களான நூல், சாயம் உள்ளிட்டவைகளை வெளி மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

நஷ்டம்

இதற்கு முன்பு தினந்தோறும் ரூ.50ஆயிரம் வரை இங்கு தயாரிக்கப்பட்ட சேலைகள் விற்பனையாகி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 80 நாட்களுக்கும் மேலாகியும் எவ்வித விற்பனையும் நடைபெறவில்லை. கொரோனாவால் சுமார் ரூ.40லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளேன். வருங்காலத்தில் இந்த நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவது என தெரியவில்லை. இழப்பை ஈடுகட்ட உபரி பொருட்களை வாங்க தமிழக அரசு, மானிய உதவி தொகை வழங்கவேண்டும். அப்போது தான், இந்த தொழிலை மீண்டும் எடுத்து நடத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story