இறால் மீன்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய மீனவர்கள் வலியுறுத்தல்
இறால் மீன்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக படகுகள் கொண்ட பகுதி ராமேசுவரம். மீன்பிடி தொழிலை நம்பி 800-க்கும் அதிகமான விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப்படகுகளும் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் 61 நாள் தடைகாலம் முடிந்ததும் ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த 13-ந் தேதி முதல் மீன் பிடிக்க சென்றுவர தொடங்கினர்.
இவர்கள் பிடித்துவரும் இறால் மீன்களுக்கு இறால் கம்பெனியினர் உரிய விலை நிர்ணயம் செய்யாமல் மிகவும் குறைவான விலையை நிர்ணயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:- இந்த ஆண்டு ஊரடங்கு மற்றும் தடை காலம் முடிந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வந்துள்ளதோடு இறால் மீன்கள் மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 100 முதல் 200 கிலோ வரை குறைவாக கிடைத்துள்ளது. அதற்கும் உரிய விலை கிடைக்கவில்லை. இறால் கம்பெனியினர் ஊரடங்கை காரணம் காட்டி 1 கிலோ இறாலுக்கு ரூ. 350 என மிகவும் குறைவான விலையே நிர்ணயம் செய்துள்ளனர். உலகஅளவில் இந்தியாவில் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் பிடித்து வரும் பிளவர் வகை இறாலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. மற்ற நாடுகளில் உள்ள இறாலை காட்டிலும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் பிடித்து வரும் இறால்களே அதிக ருசி கொண்டது.
டீசல் விலை உயர்வு
இறால் மீன்களுக்கு ராமேசுவரம் பகுதியில் உள்ள 4 கம்பெனிகளும் சேர்ந்து சிண்டிகேட் அமைத்தும், ஊரடங்கை காரணம் காட்டியும் குறைந்த அளவிலான விலையை நிர்ணயம் செய்து அதிக லாபம் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு புறம் நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருகிறது. குறைவான விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் நாளடைவில் மீன் பிடி தொழிலை மீனவர்கள் செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். மீனவர்களின் வாழ்வாதாரமே அதலபாதாளத்திற்கு செல்லும் நிலை வந்துள்ளது. எனவே மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு அரசே உரிய விலையை நிர்ணயம் செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story