குறுவை சாகுபடிக்கு விதை, உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல்

குறுவை சாகுபடிக்கு விதை, உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயராமன், துணை பதிவாளர் அப்துல்சலீம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக தரமான உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் விலையில்லாா அரிசி, சீனி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கினோம்.
கூடுதல் மகசூல்
மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட நெல் உற்பத்தி 20 சதவீதம் அதிகரிக்க விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணை தலைவர் தென்கோவன், ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன், ஓகை கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரி பொற்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓகை கூட்டுறவு சங்க செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story