திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 July 2020 10:20 AM IST (Updated: 3 July 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருந்து வந்தது. பச்சை மண்டலமாகவும் இருந்தது. இதனால் பொதுமக்கள் எந்த ஒரு அச்சமுமின்றி இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. வெளிப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வருகிறவர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

194 ஆக உயர்வு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்திற்கு வெளிநாடு, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் மூலம் கொரோனா பரவி வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் பெற்று திருப்பூருக்கு வருகிறவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கல்லம்பாளையம் கல்லக்காடு தோட்டத்தை சேர்ந்த 24 வயது பெண், தாராபுரம் அலங்கியத்தை சேர்ந்த 40 வயது ஆண், 31 வயது ஆண், பல்லடம் கரைப்புதூரை சேர்ந்த 47 வயது பெண், 48 வயது பெண், 21 வயது ஆண் ஆகிய 6 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story