திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கண்காணிக்கும் நவீன கருவி ஆதார், இ-சேவை மையம் முன்பு பொருத்தப்பட்டன


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கண்காணிக்கும் நவீன கருவி   ஆதார், இ-சேவை மையம் முன்பு பொருத்தப்பட்டன
x
தினத்தந்தி 3 July 2020 10:45 AM IST (Updated: 3 July 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கண்காணிக்கும் வகையில் நவீன கருவி ஆதார் மையம், இ-சேவை மையம் முன்பு பொருத்தப்பட்டன.

திருப்பூர், 


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம், இ-சேவை மையம் ஆகியவற்றில் தினமும் மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஆதார் மையம், இ-சேவை மையம் முன்பு சமூக இடைவெளி விட்டு வளையங்கள் வரையப்பட்டு இருந்தாலும் மக்கள் உரிய முறையில் இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இது கொரோனா பரவலுக்கு சாதகமாக அமையும் என்பதால் சமூக இடைவெளியை கண்காணிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம், இ-சேவை மையம் ஆகியவற்றின் முன்பு நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியைகண்காணிக்கும்

1 மீட்டர் அல்லது 3 அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம். ஆதார் மையம், இ-சேவை மையங்களுக்கு வருபவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் 3 அடி இடைவெளி விட்டு நிற்பது அவசியம். அவ்வாறு இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்றால் இந்த புதிய கருவி கண்காணித்து ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கும். சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்று தெரிவிக்கும்.

இந்த கருவியில் உள்ள கேமரா, மக்களின் உருவத்தை படம் பிடித்து சென்சார் மூலமாக இயங்கக்கூடியது. இந்த கருவியின் செயல்பாட்டை நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். இதன் மூலமாக அதிகமாக மக்கள் கூடுவது தவிர்க்கப்படும். ஒவ்வொருவருக்கும் இடையேயான சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற முடியும். மேலும் கணினி திரை வைக்கப்பட்டுள்ளதால் வரிசையில் நிற்பவர்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை நாம் இணையதளம் மூலமாக கண்காணிக்கவும் முடியும். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களையும் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கருவி ஏற்கனவே திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.

Next Story