பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் சாந்தா எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம்
குழந்தை திருமண சட்டப்படி பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுக்கு கீழ் நடக்கும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படுகிறது. குழந்தை திருமணம் என்பது ஆணுக்கும் நடந்தாலும் அல்லது பெண்களுக்கு நடந்தாலும் குழந்தைகளின் உரிமைகளை அத்துமீறும் செயலாகவே உள்ளது.
குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும், அத்தகைய திருமணங்கள் நடத்துபவர்கள் மீது அதிகபட்ச தண்டனை அளிப்பதற்கு இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் எந்த வகையில் கிடைக்கப்பெற்றாலும், அந்த புகாரினை ஏற்று நடவடிக்கை எடுக்க குழந்தை திருமண தடுப்பு அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் வரை...
மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவது பற்றி தகவல் அளிக்கப்படுகிறவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். குழந்தைகளுக்கு எங்கு குழந்தை திருமணம் நடக்கிறதோ, அந்த குழந்தையின் பெற்றோர், காப்பாளர் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்க ஊக்குவிப்பவர், அனுமதிப்பவர், அதை தடுக்க தவறியவர்கள் மற்றும் குழந்தை திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது ரூ.1 லட்சம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பாக புகார்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட தலைமை மருத்துவமணை அருகில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நேரடியாக புகார் செய்யலாம் அல்லது குழந்தைகளுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story