தொழிலாளி கொலை வழக்கு: சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கு:   சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை   கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 3 July 2020 11:59 AM IST (Updated: 3 July 2020 11:59 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கொலை செய்த வழக்கில், சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கரூர், 

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த மகாமுனியின் மகன்கள் சரவணன்(36), சதீஷ்(34), சங்கர்மணி(36) ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், சதீஷ், சங்கர்மணி ஆகியோர் சேர்ந்து சுமதியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சுமதியின் சகோதரரான திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கூலித்தொழிலாளி பெருமாள் (40) திம்மாச்சிபுரம் வந்து, என் அக்காளை ஏன் தாக்கினீர்கள் என சரவணன் உள்ளிட்டோரை தட்டிக்கேட்டுள்ளார்.

தொழிலாளி கொலை

இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், சரவணன் உள்ளிட்ட 3 பேரும் பெருமாளை தாக்கியுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தை பெருமாள் மீது ஏற்றியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெருமாள், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பெருமாளை கொலை செய்த சரவணன், சதீஷ், சங்கர்மணி ஆகிய 3 பேரை கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு கூறினார். அதில், குற்றவாளிகள் சரவணன், சதீஷ், சங்கர்மணி ஆகியோருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் 3 மாதம் சிறைத்தண்டனை என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story