காவலர்களுக்கு கொரோனா எதிரொலி பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் திடீர் போராட்டம்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பீதி அடைந்துள்ள கைதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பீதி அடைந்துள்ள கைதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலர்களுக்கு கொரோனா
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20 கைதிகள் மற்றும் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சிறை நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனாலும் சமீபத்தில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை மற்ற கைதிகளுடன் சேர்த்து அடைப்பதில்லை.
அவர்கள் பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள சிறை அறைகளில் அடைத்து, 21 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். அதன்பிறகு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே பெண்கள் சிறையில் இருந்து மற்ற கைதிகள் இருக்கும் அறைகளுக்கு மாற்றப்படுகின்றனர். அதே நேரத்தில் சிறையில் பணியாற்றும் 6 காவலர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த காவலர்கள் 6 பேரும் சிறையில் மற்ற கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளுக்கு வந்து சென்றதும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கைதிகளுக்கும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது.
கைதிகள் திடீர் போராட்டம்
இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட கைதிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எங்களது உயிர் மீது பயம் இருக்கிறது, சிறையில் இருந்தால் எங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கைதிகள் கூறியுள்ளனர். மேலும் தங்களை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி கைதிகள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் உயர் அதிகாரிகள் சிறைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் பேசினார்கள். சிறைக்குள் காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதிப்பதாகவும், சிறைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினார்கள். இதையடுத்து, கைதிகள் போராட்டத்தை கைவிட்டு உள்ளனர். ஆனாலும் சிறை கைதிகள் தங்களுக்கும் கொரோனா பாதிப்பு வந்து விடுமோ என்ற பீதியில் இருந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story