பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது: நெல்லையில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 31 பேருக்கு தொற்று


பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது: நெல்லையில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 31 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 3 July 2020 10:30 PM GMT (Updated: 3 July 2020 6:13 PM GMT)

நெல்லையில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 31 பேர் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை,

நெல்லையில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 31 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஜவுளிக்கடை

நெல்லையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் வணிக நிறுவனங்கள், கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதே போல் நெல்லை சந்திப்பில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஜவுளிக்கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் அந்த கடை மூடப்பட்டது. கடையை சுற்றிலும் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

மானூர் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் கங்கைகொண்டான் சோதனை சாவடி பகுதியில் மாதிரி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

41 பேருக்கு

இதே போல் நெல்லை மாவட்டத்தில் நேற்று 41 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 880 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 41 பேருடன் சேர்த்து கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 921 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 8 பேர் இறந்து விட்டனர். 619 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 294 பேர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி-தூத்துக்குடி

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 4 பேருடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 207 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். 183 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், வணிக வளாக ஊழியர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 1,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,055 ஆக அதிகரித்தது.

அரசு அலுவலகங்கள்

நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 3 பேர், மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஒருவர் மற்றும் தூத்துக்குடி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.

Next Story