சாத்தான்குளம் வழக்கில் முக்கிய சாட்சி: தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு போலீஸ் ஏட்டு ரேவதி ஆஜர் வாக்குமூலம் அளித்தார்
சாத்தான்குளம் சம்பவத்தில் முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் சம்பவத்தில் முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
முக்கிய சாட்சி
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று தாக்கினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் இறந்தனர்.
இதனால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு பணியாற்றிய போலீஸ் ஏட்டு ரேவதியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அவர் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு சூடுபிடித்தது. இதனால் ஏட்டு ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில், அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏட்டு ரேவதியை முக்கிய சாட்சியாக சேர்த்து உள்ளனர்.
வாக்குமூலம்
இதைத்தொடர்ந்து அவரை சாட்சி அளிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் ஏட்டு ரேவதியை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் மாஜிஸ்திரேட்டிடம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தனிமையில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அதனை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரனும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை முடிவடைந்து மாலை 5.30 மணிக்கு ரேவதி வெளியே வந்தார்.
அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஏட்டு ரேவதியை பாதுகாப்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சம்பவங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story