விஷவாயு தாக்கி பலியான 4 பேர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நெல்லையில் பரபரப்பு
தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி பலியான 4 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நெல்லையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி பலியான 4 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நெல்லையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 பேர் பலி
தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியதால் அதனை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். இதற்காக கழிவுநீர் வாகனத்துடன் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர்.
இந்த பணியில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பாண்டி (வயது 41), பாலகிருஷ்ணன் (20), இசக்கிராஜா, மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
கழிவுநீர் தொட்டிக்குள் அடுத்தடுத்து இறங்கிய இவர்கள் 4 பேரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர். தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட 4 பேரது உடல்களும் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உறவினர்கள் போராட்டம்
அங்கு நேற்று காலை 4 பேருடைய உறவினர்களும் குவிந்தனர். அவர்கள் 4 பேரது உடல்களையும் வாங்க மறுத்தனர். மேலும் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வருவாய் துறை அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு ஆகியோர் ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு தரப்பில் கிடைக்கும் அனைத்து உதவிகளையும் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஐகிரவுண்டு பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
கலெக்டரிடம் மனு
மேலும் இசக்கிராஜாவின் தந்தை மாரி முருகன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம் அழைத்ததன் பேரில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய என்னுடைய மகன் இசக்கிராஜா, ஆலங்குளம் தினேஷ்குமார், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பாண்டி ஆகியோர் சென்றனர். அப்போது விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்து விட்டனர். 4 பேர் உயிர் பலிக்கு காரணமான கழிவுநீர் தொட்டி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4 பேரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்தினரின் கல்வி செலவையும், அரசு சார்ந்த நிதி மற்றும் இழப்பீடையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story