2 ஆயிரம் பாடல்களுக்கு பணியாற்றியவர்: இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ் கான் மரணம் திரையுலகத்தினர் இரங்கல்
இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ் கான் மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து உள்ளனா்.
மும்ைப,
இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ் கான் மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து உள்ளனா்.
பழம்பெரும் நடன இயக்குனர்
இந்தி சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் பெண் நடன இயக்குநர் சரோஜ் கான். 71 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பை பாந்திராவில் உள்ள குருநானக் ஆஸ்பத்திரியில் மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக கடந்த சனிக்கிழமை சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவர் மூச்சு திணறலுக்கு மட்டும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு மும்பை மலாடு பகுதியில் நேற்று காலை நடைபெற்றது.
3 முறை தேசிய விருது
இவர் பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்', ‘தாக் தாக்', ‘ஹவா ஹவா', ‘தம்மா தம்மா' போன்றவற்றுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நடிகைகள் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார். 3 முறை தேசிய விருதுகளையும் பெற்று உளளார்.
2 ஆயிரம் பாடல்கள்
சரோஜ் கான் தனது 13-வயதில், நடன இயக்குநர் சோகன்லாலை திருமணம் செய்துகொண்டார். அப்போது சோகன் லாலுக்கு 41 வயதாகி இருந்தது. அவரிடம் இருந்து நடன கலையை கற்றுக்கொண்ட சரோஜ் கான் திரைப்படங்களில் நடன உதவி இயக்குனராக பணியாற்றினார். கடந்த 1974-ம் ஆண்டு ‘கீதா மேரா நாம்' என்ற திரைப்படத்துக்கு நடன இயக்குனராக அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படமும், அதன்பின் பணியாற்றிய திரைப்படங்களும் அவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை.
கடந்த 1980 மற்றும் 1990-களில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனராக சரோஜ்கான் விளங்கினார். குறிப்பாக கடந்த 1987-ம் ஆண்டு வெளியாகிய ‘மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் வரும் ‘ஹவா ஹவாய்' பாடலின் நடனம் இவரை புகழ்பெற செய்தது. இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் மத்தியில் “மாஸ்டர்ஜி” என்ற அடைமொழியுடன் சரோஜ் கான் அழைக்கப்பட்டார். இவர் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் கரண் ஜோகர் தயாரிப்பில் வெளிவந்த கலங்க் திரைப்படத்தில், ‘தபா ஹோயேகே' பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
பழம் பெரும் நடன இயக்குனரான சரோஜ் கானின் மறைவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்சய் குமார், அஜய் தேவ்கன், ஜான் ஆபிரகாம், சோனு சூட், மகேஷ் பாபு, இயக்குனா் சேகர் கபூர், மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவ்டேகர், நடிகைகள் மாதுரி தீட்சித், கஜோல், காஜல் அகர்வால், தமன்னா, ஷில்பா ஷெட்டி, அனுஷ்கா சர்மா, கங்கனா ரணாவத், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story