கடலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், போலீசார் உள்பட 78 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியது


கடலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், போலீசார் உள்பட 78 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 3 July 2020 10:00 PM GMT (Updated: 3 July 2020 9:34 PM GMT)

மாவட்டத்தில் டாக்டர்கள், போலீசார் உள்பட 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ தாண்டியுள்ளது.

கடலூர், 

மாவட்டத்தில் டாக்டர்கள், போலீசார் உள்பட 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ தாண்டியுள்ளது.

78 பேருக்கு உறுதி

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று சிலரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இவர்களில் கடலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்கள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 டாக்டர்களுக்கு பாதிப்பு உறுதியானது.

போலீசார்

இதை தவிர நர்சு, மருத்துவ பணியாளர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவை சேர்ந்த போலீஸ்காரர், பெண் போலீஸ், விருத்தாசலம் போலீஸ்காரருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் சென்னையில் இருந்து விருத்தாசலம், கடலூர், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவிலுக்கு வந்த 6 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து கடலூருக்கு வந்த ஒருவர், திருச்சியில் இருந்து மங்களூர் வந்த ஒருவர், ஓசூரில் இருந்து அண்ணாகிராமம் வந்த ஒருவர், திருவண்ணாமலையில் இருந்து கீரப்பாளையம் வந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2 கர்ப்பிணிகள்

கடலூர், விருத்தாசலத்தை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், நோய் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூர், விருத்தாசலம், வடலூர், புவனகிரி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெய்வேலியை சேர்ந்த 11 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூரை சேர்ந்த 17 பேர், அண்ணாகிராமத்தை சேர்ந்த 11 பேர், புவனகிரியை சேர்ந்த ஒருவர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஒருவர், மங்களூரை சேர்ந்த 3 பேர், மங்கலம்பேட்டையை சேர்ந்த 10 பேர் என 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 826 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 349 பேர் கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசோதனை

மாவட்டத்தில் இது வரை 26 ஆயிரத்து 387 பேருக்கு பரிசோதனை எடுத்ததில், 1201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,164 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். நேற்று புதிதாக 526 பேரின் உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 1,690 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும்.

இது தவிர 325 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கட்டுப்பாட்டு பகுதிகளில் 59 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story