விழுப்புரத்தில் அதிகரிக்கும் பாதிப்பு: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகள் தயார்


விழுப்புரத்தில் அதிகரிக்கும் பாதிப்பு: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகள் தயார்
x
தினத்தந்தி 3 July 2020 10:00 PM GMT (Updated: 3 July 2020 9:52 PM GMT)

விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா வைரசின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுவது தொடர்கதையாக நீண்டு வருகிறது. இதனால் தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் ஒரே எதிரியாக மாறி இருக்கும் கொரோனாவை எதிர்த்து, உலகமே போரிட்டு கொண்டு இருக்கிறது. தினந்தினம் அதிகரிக்கும் பாதிப்புகளால், சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் அரசு பள்ளி, கல்லூரிகள் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அதுபோல் ரெயில் பெட்டிகளும் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் ஏப்ரல் முதல் வாரத்தில் நோயால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்த வசதியாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 10 ரெயில் பெட்டிகள் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

ஆயிரத்தை தாண்டியது

இந்நிலையில் ஏப்ரல் மாதம் இறுதியில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆகவும், மே மாதம் முடிவில் 340 ஆகவும் இருந்தது. அதன் பிறகு சில நாட்கள் நோயின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. அதேநேரத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டு பெட்டிகளான 10 பெட்டிகளும் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிதீவிரமானது. ஜூன் மாதத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயரத்தொடங்கி நேற்று ஆயிரத்தை தாண்டியது. மேலும் பாதிப்பு அதிகரிக்கும் நிலை உருவாகி உளளது.

ரெயில் பெட்டிகள் தயார்

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஒரு சில தனியார் கல்லூரிகளும் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான், சென்னையில் இருந்து மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு 10 ரெயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டு அவை கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அந்த ரெயில் பெட்டிகளில் ரெயில்வே சுகாதார குழுவினர் படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு படுக்கை வசதியும் போதிய இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கி பரிசோதனை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ரெயில் பெட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

160 பேர் தங்குவதற்கான வசதி

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு பெட்டியிலும் 16 பேர் தங்குவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இந்த 10 பெட்டிகளில் 160 பேர் தங்குவதற்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் 2 கழிவறைகள், 2 குளியலறைகள் உள்ளன. கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களை இங்குள்ள ரெயில் பெட்டிகளில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் நோய் தொற்று உறுதியானால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த ரெயில் பெட்டி கூடுதல் வசதியாக இருக்கும் என்றனர்.

Next Story