ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றம்


ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றம்
x
தினத்தந்தி 3 July 2020 11:44 PM GMT (Updated: 3 July 2020 11:44 PM GMT)

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.

808 கடைகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி முதல் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து செயல்பட தொடங்கியது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாற்று இடமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் ரூ.1 கோடி செலவில் 709 காய்கறி கடைகளும், 99 பழக்கடைகளும் என மொத்தம் 808 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரம் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.

வ.உ.சி. பூங்கா

முன்னதாக ஈரோடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள், ஒலிபெருக்கி மூலம் நாளை (அதாவது இன்று) முதல் நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட தொடங்கும், எனவே வியாபாரிகள் அனைவரும் தங்களது பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்’ என்றனர்.

அதனால் வியாபாரிகள் கடைகளை காலிசெய்துவிட்டு, தங்களது பொருட்களை வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மஞ்சள் நீர் தெளித்து, சிறப்பு பூஜை செய்து தங்களது வியாபாரத்தை தொடங்கினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கொண்டு வந்திருந்த தங்களது காய்கறிகளை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இறக்கி வைத்தனர். பின்னர் வழக்கம்போல் காய்கறி வியாபாரம் நடந்தது.

Next Story