கொரோனா பாதித்தோர் தங்கியிருந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி கலெக்டர் ராமன் ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது
சேலம்,
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருமிநாசினி தெளிக்கும் பணி
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 54-க்குட்பட்ட தாதகாப்பட்டி, என்.எஸ்.கே. படிப்பகம் சாலை, அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 33-க்குட்பட்ட சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கியிருந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் ராமன் தெரிவித்ததாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் தினமும் தொடர்ந்து குறைந்த பட்சம் 5 முறை கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், விட்டமின் டானிக், அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரைகள், ஜிங்க் சல்பேட் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
வீடுகள் தோறும் சுகாதாரத்தை பேணும் வகையில் பிளச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கி சுத்தம் செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அனைவரும் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இந்த பகுதிகளில் பணியாளர்களை தனியாக அமர்த்தி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எது வேண்டுமானாலும் கேட்டு அதற்கான தொகையினை அவர்களிடம் பெற்று பணியாளர்களே வாங்கி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் பார்த்து கொள்வதோடு தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.
வீடுகள் தோறும் பணியாளர்கள் நேரில் சென்று யாருக்கேனும் உடற்சோர்வு, நீண்ட காய்ச்சல், தொடர் இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றதா? என்பது போன்ற விவரங்களை கேட்டறிய வேண்டும். அவ்வாறு நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து உரிய பரிசோதனைகளையும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.
இந்த ஆய்வின் போது சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ், சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பார்த்திபன், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ் பாபு , சித்த மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story