ஆலங்காயம் அருகே ஒற்றை காட்டுயானை அட்டகாசம் டிராக்டர், மோட்டார்சைக்கிளை வழிமறித்து சேதப்படுத்தியது
வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் காப்புக்காடு பகுதியில் இருந்து வந்த ஒரு தந்தத்துடன் கூடிய ஒற்றை காட்டுயானை வசந்தபுரம் பகுதியில் 2 நாட்களாக அட்டகாசம் செய்தது.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் காப்புக்காடு பகுதியில் இருந்து வந்த ஒரு தந்தத்துடன் கூடிய ஒற்றை காட்டுயானை வசந்தபுரம் பகுதியில் 2 நாட்களாக அட்டகாசம் செய்தது. அந்தப் பகுதியில் வனத்துறை பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் அண்ணாமலைகொட்டாய் அருகே ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தது.
அந்த டிராக்டரை ஒற்றை காட்டுயானை வழிமறித்தது. காட்டுயானையை பார்த்த டிரைவர் பதற்றம் அடைந்து டிராக்டரை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். டிராக்டரில் இருந்த கட்டுமானப் பொருட்கள் ஒற்றை காட்டுயானை நடுரோட்டில் வீசியது.
மேலும் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு விவசாயி ஒருவர் வேகமாக வந்தார். அவரை காட்டுயானை வழிமறித்தது. உடனே அவர் திடீரென மோட்டார்சைக்கிளை நடுரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த இடத்தில் நீண்ட நேரமாக நின்ற ஒற்றை காட்டுயானை டிராக்டர், மோட்டார்சைக்கிளை சேதப்படுத்தியது. விவசாயி ஏற்றி வந்த மூட்டைகளில் இருந்த காய்கறிகளை காட்டுயானை தின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து ஒற்றை காட்டுயானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story