மேலூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


மேலூர் அருகே  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2020 1:02 AM GMT (Updated: 4 July 2020 1:02 AM GMT)

வெளியூர்களில் இருந்து ஏராளமான மதுபிரியர்கள் தங்கள் கிராமத்திற்கு வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலூர், 

மேலூர் அருகே திருவாதவூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மதுரை நகர் மற்றும் கிழக்கு, மேற்கு போன்ற தாலுகாக்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அருகாமையில் உள்ள திருவாதவூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மதுபிரியர்கள் இருசக்கர வாகனங்களில் மது வாங்க வருவதால் தங்கள் பகுதியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாகவும், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் போலீசார் அவர்களை சமரசம் செய்ய முயன்றபோது பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு

இதனிடையே மது வாங்க வந்த மது பிரியர்கள் எதிரில் நின்று கொண்டிருந்ததால் முன்னெச்சரிக்கையாக போலீசார் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட செய்தனர். இந்த கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து அரசிடம் தெரிவிப்பதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். பெண்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story