விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா கிராம உதவியாளர் பலி


விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா கிராம உதவியாளர் பலி
x
தினத்தந்தி 4 July 2020 1:54 AM GMT (Updated: 4 July 2020 1:54 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிராம உதவியாளர் பலியானார்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22,074 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 4,031 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 249 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 13 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 515 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பரவலாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதில் 7 போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விருதுநகர்-மதுரை ரோட்டை சேர்ந்த 55 வயது நபர், அய்யனார்நகரை சேர்ந்த 32 வயது பெண், ரோசல்பட்டியை சேர்ந்த 42 வயது நபர், அல்லம்பட்டியை சேர்ந்த 22, 77 வயது நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்

சிவகாசியை சேர்ந்த 48 வயது நபர், டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது போலீஸ்காரர், 28 வயது பெண், 8 வயது சிறுவன், 35 வயது நபர், சிவகாசி வெற்றிஞானியார்தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர், விஸ்வநத்தத்தை சேர்ந்த 60 வயது பெண், 15 வயது சிறுவன், சீதக்காதி நடுத்தெருவை சேர்ந்த 45 வயது நபர். சிவகாசியை சேர்ந்த 24 வயது பெண், 31 வயது நபர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் கஞ்சநாயக்கன்பட்டி, பெருங்குடி, பூலாங்கால், கல்குறிச்சி, காரியாபட்டி, சத்திரரெட்டியபட்டி, கட்டளைப்பட்டி, வெள்ளூர், வடக்குபட்டி, தாயில்பட்டி, மம்சாபுரம், இலந்தைக்குளம், குன்னூர், புதுக்கோட்டை, மற்றும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

873 ஆக உயர்வு

இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நகர்புறங்களிலும், கிராமங்களிலும் தொடர்பு காரணமாக பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று 562 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் 15 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கிராம உதவியாளர் பலி

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றிய 59 வயது நபர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு வேறு நோய் பாதிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Next Story