மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டத்தில் 217 இடங்களில் நடந்தது


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்  திருப்பூர் மாவட்டத்தில் 217 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 4 July 2020 3:22 AM GMT (Updated: 2020-07-04T08:52:53+05:30)

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 217 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர், 

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர், மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

உன்னிகிருஷ்ணன்(சி.ஐ.டி.யு.), சேகர்(ஏ.ஐ.டி.யு.சி.), சிதம்பரசாமி(எல்.பி.எப்.), சிவசாமி(ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி(எச்.எம்.எஸ்.), சிவபாலன்(எம்.எல்.எப்.) உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

217 இடங்கள்

கொரோனா ஊரடங்கால் வாழ்விழந்து நிற்கும் இந்திய மக்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் 10 கிலோ உணவு தானியம் இலவசமாக 6 மாதம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலமாக நிதி உதவி, நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களையும், எண்ணெய், எரிவாயு, கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது 2 பேர் கையில் மண்சட்டியை ஏந்தியபடி பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 84 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 217 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story