ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கில் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் ‘சீல்’ வைக்கப்படும் கலெக்டர்கள் எச்சரிக்கை
முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் ‘சீல்‘ வைக்கப்படும் என்று பெரம்பலூர் கலெக்டர் கூறியுள்ளார்.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த (ஜூலை) மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த மாதத்திற்கான முதல் முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தம் செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் ்மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்.
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே செயல்படும். முழு ஊரடங்கு காலத்தில் கடைகளை திறந்து வியாபாரம் செய்வோரின் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, குற்றவழக்கு பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து தங்களை காத்துக்கொள்வதோடு அரசின் கொரோனா நோய் தொற்று தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அனுமதி
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த தொற்று நோயினை மேலும் பரவாமல் தடுக்கும் வண்ணம் மேற்காணும் தினங்களில் வெளியில் வருவதை தவிர்க்குமாறும், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story