கரூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு உள்பட புதிதாக 6 பேருக்கு கொரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்
மாவட்டத்தில், புதிதாக போலீஸ் ஏட்டு உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பரவல் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரூர்,
கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஒருவருக்கு கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவருக்கும் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில், 48 வயதுடைய போலீஸ் ஏட்டு ஒருவருக்கும், பிரண்ட்ஸ் ஆப் போலீசில் பணிபுரியும் 24 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், அவருடைய தந்தைக்கும் கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து டவுன் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அனைவரும் வெளியேற்றப்பட்டு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. போலீஸ் நிலையம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. போலீஸ் நிலையம் அருகில் உள்ள இடத்தில் சாமியானா பந்தல் அமைத்து, அங்கு இருக்கைகள் போடப்பட்டு, புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் இருந்து போலீசார் புகார் மனுக்களை பெற்றனர்.
பொதுமக்கள் அச்சம்
இதேபோல், கரூர் வடிவேல்நகர் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கும், பள்ளப்பட்டியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவருக்கும், பெங்களூருவில் இருந்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு உள்பட புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 7 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் குணமடைந்து நேற்று வீட்டிற்கு சென்றனர்.
Related Tags :
Next Story