கல்லணையில் தண்ணீர் திறந்து 17 நாட்கள் ஆகியும் வாய்க்காலில், தண்ணீர் வராததால் 160 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு நெல் நாற்றுகளை விவசாயிகள் விற்கும் அவலம்


கல்லணையில் தண்ணீர் திறந்து 17 நாட்கள் ஆகியும் வாய்க்காலில், தண்ணீர் வராததால் 160 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு நெல் நாற்றுகளை விவசாயிகள் விற்கும் அவலம்
x
தினத்தந்தி 4 July 2020 6:25 AM GMT (Updated: 4 July 2020 6:25 AM GMT)

கல்லணையில் தண்ணீர் திறந்து 17 நாட்கள் ஆகியும் வாய்க்காலில் தண்ணீர் வராததால் 160 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடவு பணிக்காக விடப்பட்டு இருந்த நெல் நாற்றுகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்து அங்கிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 16-ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் வெண்ணாற்றில் இருந்து திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வடவாறாக பிரிந்து செல்கிறது. இந்த வடவாறு தஞ்சை, அம்மாப்பேட்டை வழியாக செல்கிறது. இந்த வடவாற்றில் தஞ்சையை அடுத்த கொடிக்காலூர் சாலையில் உள்ள அம்மாத்தோட்டம் வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் 166 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது.

வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை

தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லவில்லை. வடவாற்றில் தண்ணீர் வந்த மறுநாளே இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும். இதன் மூலம் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்னதாகே விவசாயிகள் நாற்றங்காலை தயார் செய்திருந்தனர். தற்போது நாற்றுகள் வளர்ந்து முற்றிய நிலையில் உள்ளது. ஆனால் தண்ணீர் வராததால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். ஒரு சில விவசாயிகள், நடுவதற்காக விடப்பட்டு இருந்த நாற்றுகளை விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

வடவாற்றில் இருந்து அம்மாத்தோட்டம் வாய்க்கால் செல்லும் மதகு பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகளே சேர்ந்து பொக்லின் எந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரினர். அதன்படி தண்ணீர் மதகு பகுதி வரை சென்றது. அதற்கு மேல் செல்லவில்லை. தற்போது மதகு பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது.

மதகு பகுதியில் அடைப்பு

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “அம்மாத்தோட்டம் வாய்க்கால் தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் வாய்க்கால் வயல் மட்டத்திற்கு மேடாகி விட்டது. மேலும் அம்மாத்தோட்ட வாய்க்கால் இரும்பு பாலத்தின் மதகு பகுதியின் உள்பகுதியில் தூண் இடிந்து விழுந்ததால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து 17 நாட்களுக்கு மேல் ஆகியும் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீர் பாசனத்துக்கு போக மீதி வெண்ணாற்றில் கலந்து விடும். தற்போது தண்ணீர் வராததால் விவசாயிகள் என்னசெய்வது என்று தெரியாமல் உள்னர். பல விவசாயிகள் நாற்றுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பாசன வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

Next Story