தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்   முறை வைக்காமல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 July 2020 6:40 AM GMT (Updated: 4 July 2020 6:40 AM GMT)

தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு, 

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 16-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணை குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு இருப்பதால் குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் உள்ளது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிகாரி ஆலோசனை

பல ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாற்றங்கால் தயாரித்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தலைஞாயிறு வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பயிர்கள் வளர்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

இதுகுறித்து விவசாயி முருகையன் கூறுகையில், ‘கடைமடை பகுதியான இந்த பகுதிக்கு தண்ணீர் மிக குறைந்த ஆளவே வந்துள்ளது. இது சாகுபடி செய்வதற்கு பற்றாக்குறையாக உள்ளது. கடைமடை பகுதியில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக அணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்றார்.

Next Story