சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 4 July 2020 11:00 PM GMT (Updated: 4 July 2020 5:10 PM GMT)

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தந்தை-மகன் கொலை வழக்கு

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை அவர்கள் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவான போலீஸ்காரர் முத்துராஜை வலைவீசி தேடி வந்தார்கள். நேற்று முன்தினம் இரவில் விளாத்திகுளம் அருகே பூசனூரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து போலீசார் விடிய, விடிய விசாரித்தனர்.

மதுரை சிறைக்கு மாற்றம்

பின்னர் போலீஸ்காரர் முத்துராஜை நேற்று காலையில் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸ்காரர் முத்துராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரையும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாலையில் அவர்கள் 5 பேரையும் பேரூரணி சிறையில் இருந்து தனி வாகனத்தில் ஏற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். மதுரையில் சி.பி.சி.ஐ.டி. கோர்ட்டு உள்ளதால், அங்கு தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

விரைவில் காவலில் எடுத்து விசாரணை

முன்னதாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். சாட்சிகளின் வாக்குமூலம், வழக்கு தொடர்பான தடயங்கள், ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், கைது செய்யப்பட்டவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்.

தற்போது நடத்திய விசாரணையின் அடிப்படையில் கூடுதலாக யாரேனும் கைது செய்யப்படுவார்களா? என்று சொல்ல முடியாது. விசாரணை அனைத்து கோணங்களிலும் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்னரே அது தெரியவரும். கூடுதலாக ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அதுகுறித்து விசாரணை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story