விஷவாயு தாக்கி பலியான 4 பேர் குடும்பத்துக்குதலா ரூ.10 லட்சம் நிதி உதவி அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி வழங்கினர்
விஷவாயு தாக்கி பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.
நெல்லை,
விஷவாயு தாக்கி பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.
4 பேர் பலி
தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த இசக்கிராஜா, பாலகிருஷ்ணன், பாண்டி மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேர் விஷவாயு தாக்கி பலியானார்கள்.
அவர்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்து, இரங்கலும் தெரிவித்தார்.
ரூ.10 லட்சம்
இதையடுத்து 4 பேருடைய குடும்பத்தினரும் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.
அப்போது, கலெக்டர்கள் ஷில்பா (நெல்லை), சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, சின்னப்பன், மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கணேசராஜா, ஆவின் தலைவர் சுதா கே.பரமசிவன், அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் உடன் இருந்தனர்.
பாதுகாப்பு நடைமுறைகள்
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், “கடந்த 2-ந் தேதி விஷவாயு தாக்கி 4 பேர் இறந்த உடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், 4 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார். அதன்படி இறந்த 4 பேருடைய குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது“ என்றார்.
Related Tags :
Next Story