ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கியது
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் நேற்று செயல்பட தொடங்கியது.
ஈரோடு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் நேற்று செயல்பட தொடங்கியது. வியாபாரம் செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேதாஜி காய்கறி மார்க்கெட்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி முதல் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டால் மாற்று இடமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரூ.1 கோடி மதிப்பில் 808 காய்கறி மற்றும் பழக்கடைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த கடைகள் அனைத்தும் மார்க்கெட் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டன. இதனால் ஈரோடு பஸ்நிலையத்தில் கடை அமைத்திருந்த வியாபாரிகள் நேற்று முன்தினம் தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு வ.உ.சி. பூங்காவிற்கு சென்றனர். நேற்று இரவு முதல் நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்காவில் செயல்பட தொடங்கியது.
கூட்டம் அலைமோதியது
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தைவிட நேற்று காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னதாக பொதுமக்களும், வியாபாரிகளும் கிருமிநாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்றனர். வியாபாரிகள் வாகனம் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டது. வாகனத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காய்கறிகளை வாங்க வரும் சரக்கு வாகனங்கள் பவானி ரோடு வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டன. முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வியாபாரிகள் ஒன்று திரண்டனர்
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மார்க்கெட் பகுதியில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே சென்று வந்தனர். மேலும் காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்களும் ஆங்காங்கே சகதியில் சிக்கியது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் ஒலிபெருக்கி மூலம் ‘அரசு வலியுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணிக்குள் வியாபாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும்’ கூறினர். பின்னர் காலை 7.30 மணி அளவில் நுழைவாயில் பூட்டப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்று திரண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று முறையிட்டனர்.
கூடுதல் நேரம்
அப்போது வியாபாரிகள் கூறும்போது, ‘நாளை (அதாவது இன்று) முழு ஊரடங்கு என்பதால் நாங்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி வைத்துள்ளோம். இவைகளை விற்பனை செய்யாவிட்டால் கெட்டு போகும். எனவே எங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தரவேண்டும். மேலும் மார்க்கெட் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால் எங்களுக்கு சிரமமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்’ என்றனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, காலை 9 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கினர். பின்னர் வியாபாரிகள் திரும்பி சென்று தங்களது வியாபாரத்தை கவனித்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்களை வைக்காமல் வெளிப்புறமாக வைத்திருந்தனர். இதனை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story