விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா களக்காட்டில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு-சாலைகள் வெறிச்சோடின
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. களக்காட்டில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் 5 பேருக்கு பாதிப்பு
விக்கிரமசிங்கபுரம் நகரசபையில் ஒரு தியேட்டர் அருகே மெயின்ரோட்டில் உள்ள மருந்து கடை நடத்தி வருபவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் மும்பையில் இருந்து வடக்கு அகஸ்தியர்புரத்திற்கு வந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 5 பேரும், வடக்கு அகஸ்தியர்புரம் வந்த அந்த பெண்ணின் வீட்டில் 11 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மருந்து கடை அருகில் செயல்படும் 3 டாக்டர்களின் ஆஸ்பத்திரிக்கு கடந்த 5 நாட்களில் சிகிச்சைக்கு வந்தவர்கள் யார் யார் என்ற விவரத்தையும் நகரசபை சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர். நேற்று மதியம் வரை கடந்த 5 நாட்களில் 180 பேர் இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது.
மேலும் சிவந்திபுரம் பஞ்சாயத்து உதிரமுத்தன்பட்டி ரேஷன் கடை ஊழியர், அவரது மனைவி, மகள் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 10-ந் தேதி வரை ரேஷன் கடையை மூட சிவில் சப்ளை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அம்பை-களக்காடு
அம்பை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளருக்கு தொற்று உறுதியானது. அவரை அம்பை நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நாகூர், சுகாதாரதுறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் 108 ஆம்புலன்சில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
களக்காட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சித்தா மருத்துவர், அவரது மனைவி, மாமியார், ஜவுளிக்கடை ஊழியர்கள் 7 பேர், நகைக்கடை உரிமையாளர் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து களக்காட்டில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க களக்காடு நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினரும், திருக்குறுங்குடி சுகாதார நிலையத்தினரும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி களக்காட்டில் நேற்று முதல் கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க உத்தரவிடப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பின் களக்காடு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோட்டை பஜார், அண்ணாசாலை, கோவில்பத்து பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.
மேலும் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் வேலு, சண்முகம் மற்றும் பணியாளர்கள் முககவசம் அணியாமல் வெளியே சுற்றிய 46 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர். இதுபோல தொற்று பாதித்த பகுதிகளில் நாங்குநேரி தீயணைப்பு நிலைய வாகனம் மூலம் நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story