ஹாவேரி அருகே பரபரப்பு கொரோனா அறிகுறியுடன் இறந்தவர் உடல் பஸ் நிறுத்தத்தில் ஆதரவற்று கிடந்த அவலம்
ஹாவேரி அருகே கொரோனா அறிகுறியுடன் இறந்தவரின் உடல் பஸ் நிறுத்தத்தில் ஆதரவற்று கிடந்தது.
பெங்களூரு,
ஹாவேரி அருகே கொரோனா அறிகுறியுடன் இறந்தவரின் உடல் பஸ் நிறுத்தத்தில் ஆதரவற்று கிடந்தது. சுகாதார ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா அறிகுறி
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் பகுதியை சேர்ந்த நபர் வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். ராணிபென்னூரில் உள்ள பஸ் நிறுத்தத்திலேயே அந்த நபர் தங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த நபர் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அந்த நபருக்கு கொரோனா இருக்கலாம் என்று பீதி அடைந்தனர்.
இதுபற்றி தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நபருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து சென்றுவிட்டார்.
பஸ் நிறுத்தத்தில் உடல்
இந்த நிலையில், நேற்று காலையில் பஸ் நிறுத்தத்தில் அந்த நபர் உயிர் இழந்து கிடந்தார். கொரோனா காரணமாக அவர் உயிர் இழந்திருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதையடுத்து, சுகாதாரத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து உயிர் இழந்த நபருக்கு உடல் கவச உடைகளை அணிவித்தனர். அதன்பிறகு, உடலை துணியால் சுற்றிவிட்டு, அதனை எடுத்து செல்லாமல் பஸ் நிறுத்தத்திலேயே வைத்துவிட்டு சென்று விட்டனர். சுகாதாரத் துறை ஊழியர்களின் அலட்சியத்தால் அவரது உடல் ஆதரவற்று கிடந்தது.
2 மணி நேரத்திற்கும் மேலாக இதே நிலை நீடித்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் அந்த நபரின் உடலை எடுத்து சென்றனர். அந்த நபரின் பரிசோதனை அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைக்க உள்ளது.
பரபரப்பு
கொரோனா அறிகுறியுடன் இறந்தவரின் உடலை சுகாதாரத் துறையினரின் அலட்சியத்தால் பஸ் நிறுத்தத்தில் ஆதரவற்று கிடந்ததாகவும், இதற்கு காரணமான சுகாதார ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சம்பவம் ராணிபென்னூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story