கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய மும்பை
மும்பையில் நேற்று 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. தானே,ராய்காட் மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பையில் 2 நாட்களுக்கு மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
கொட்டித்தீர்த்தது
அதன்படி நேற்று முன்தினம் நகரில் மழை வெளுத்து வாங்கியது. பகல் முழுக்க கொட்டி தீர்த்த மழையால் நகரே வெள்ளக்காடானது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மும்பை, ராய்காட், தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டது. இதை உண்மையாக்கும் வகையில் நேற்று காலை முதலே மும்பையில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. காலை தொடங்கிய மழை மாலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது. பின்னர் சற்று தணிந்த மழை இரவில் பலத்த மழையாக பெய்தது.
கடல்நீர் புகுந்தது
பல மணி நேரங்கள் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது. குறிப்பாக தாழ்வான பகுதிகள் மழைநீரில் மூழ்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது. ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகளவில் வெளியே வராததால், இயல்பு வாழ்க்கையில் பெரிதாக பாதிப்பு இல்லை.
இதேபோல நேற்று மும்பையில் அலைசீற்றம் அதிகமாக இருந்தது. மெரின் டிரைவ் பகுதியில் காலை 11.40 மணியளவில் சுமார் 4½ மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் கரையை தாக்கின. பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் அலைசீற்றத்தால் கடல்நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் அவதி அடைந்தனர்.
விபத்து
இதுதவிர மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டன. காஞ்சூர்மார்க் பகுதியில் மழை காரணமாக மினிவேன் ரோட்டில் கவிழ்ந்தது. மலாடு குரார் விலேஜ், பாரிக் நகர் பகுதியில் பூங்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இந்தநிலையில் பலத்த மழை குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், " சயான், மிலன்சப்வே உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை. மரம் முறிந்து விழுந்தது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன" என்றார்.
நேற்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் மும்பை நகரில் 39.4 மி.மீ., புறநகரில் 52 மி.மீ. மழையளவு பதிவானது.
தானே
தானே, ராய்காட், ரத்னகிரி போன்ற கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. நவிமும்பையில் கனமழை பொழிந்தது. இந்த பகுதிகளில் மழையால் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டது.
தானே கேடாலே கார்டன் பகுதியில் 12 அடி உயர சுவர் பலத்த மழைக்கு இடிந்து விழுந்தது. தானே ஆசாத் நகர் பகுதியில் 6 அடி சுவா் சரிந்து விழுந்தது. சுவர் இடிந்த பகுதிகளில் மாநகராட்சியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தானேயில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை 53.23 மி.மீ. மழையும், பால்கரில் 35.88 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.
நிசர்கா புயலால் பெரும் பாதிப்பை சந்தித்த ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 87 மி.மீ. மழை அளவு பதிவானது.
Related Tags :
Next Story