போலீஸ் நிலையம் மூடப்பட்டது வியாபாரிகளை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொற்று கொரோனா உற்பத்தி இடமாக மாறிய வடசேரி சந்தையால் பரபரப்பு


போலீஸ் நிலையம் மூடப்பட்டது வியாபாரிகளை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொற்று கொரோனா உற்பத்தி இடமாக மாறிய வடசேரி சந்தையால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2020 11:30 PM GMT (Updated: 4 July 2020 10:41 PM GMT)

நாகர்கோவில் வடசேரி சந்தையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல் படையினருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி சந்தையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல் படையினருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா உற்பத்தி இடமாக மாறிய வடசேரி சந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்காலிக சந்தை மூடல்

சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதன் தாக்கம் சென்னையை ஆட்டி படைத்து வருகிறது. அதேபோல் தற்போது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக சந்தையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விஸ்வரூபமெடுத்துள்ளது. அந்த அளவுக்கு தற்காலிக சந்தை மூலம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

முதலில் இந்த சந்தையில் ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன்முடிவில் மேலும் 8 வியாபாரிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்காலிக சந்தை செயல்பட்டு வந்த வடசேரி பஸ் நிலையத்தின் 3 பாதைகளும் வேலியமைத்து மூடப்பட்டது.

24 வியாபாரிகள்

நேற்று முன்தினம் இரவு 2-வது கட்டமாக பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் மேலும் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி, என்.ஜி.ஓ. காலனி, திட்டுவிளை மற்றும் நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது இந்த சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரிகளையும், பணியாற்றிய ஊழியர்களையும், சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் சென்ற பொதுமக்களையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

எனவே இந்த சந்தையில் கடந்த 10 நாட்களுக்குள் வந்து பொருட்கள் வாங்கிச் சென்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல் படையினர்

இந்த சந்தையில் வியாபாரிகள் மட்டும் இன்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், 5 பெண் ஊர்க்காவல் படையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோட்டைச் சேர்ந்தவர். இவர் தினமும் ஊரில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் வேலைக்கு வந்து சென்றார்.

5 ஊர்க்காவல் படையினரும் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வடசேரி போலீஸ் நிலைய முகவரியைக் கொடுத்துள்ளனர். தற்காலிக சந்தை வியாபாரிகள், பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல் படையினர் அனைவரின் வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 34 பேருக்கு பரிசோதனை

நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நேற்று அந்த போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டார்

மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் உள்பட 34 பேருக்கு நேற்று வடசேரி நகர்நல மையத்தில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதேபோல் வியாபாரிகளின் குடும்பத்தினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல் படையினர் குடும்பத்தினரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தடுப்பு நடவடிக்கை

வடசேரி பஸ்நிலைய தற்காலிக சந்தையில் தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் உள்ளனர். இதனால் இந்த சந்தை கொரோனா உற்பத்தி இடமாக மாறியுள்ளது.

பல இடங்களுக்கும் இங்கிருந்து தொற்று பரவியதால் இன்னும் கொரோனா பரவக்கூடும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனையொட்டி வியாபாரிகள் எந்தெந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறச்சகுளம் பரதர் தெருவை சேர்ந்த 47 வயது வியாபாரிக்கு தொற்று ஏற்பட்டதால், அந்த தெருவில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் திட்டுவிளை பகுதியை சேர்ந்த 53 வயது வியாபாரிக்கும் தொற்று ஏற்பட்டது. அங்கு கிருமிநாசினி தெளித்தும், பிளச்சிங் பவுடர் தூவியும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Next Story