சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று 10 குழந்தைகள் உள்பட 56 பேர் டிஸ்சார்ஜ்


சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று 10 குழந்தைகள் உள்பட 56 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 4 July 2020 11:35 PM GMT (Updated: 4 July 2020 11:35 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 10 குழந்தைகள் உள்பட 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 10 குழந்தைகள் உள்பட 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

70 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரசுக்கு 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 99 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 39 பேர், ஆத்தூரில் 6 பேர், மேட்டூர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், ஆரியபாளையத்தில் 3 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒருவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 4 பேர் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சேலம் வந்த 3 பேர், டெல்லி மற்றும் புதுச்சேரியில் இருந்து சேலம் வந்த தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 ஆக உயர்ந்துள்ளது.

56 பேர் டிஸ்சார்ஜ்

இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள், 3 கர்ப்பிணிகள், 5 முதியவர்கள் உள்பட 56 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story