வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் வங்கி ஊழியர்கள் உள்பட 103 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,815 ஆக உயர்ந்தது
வங்கி ஊழியர்கள் உள்பட 103 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது.
வேலூர்,
வங்கி ஊழியர்கள் உள்பட 103 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,815 ஆக உயர்ந்தது.
வங்கி ஊழியர்கள்
வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர் மற்றும் வேலூர் - ஆற்காடு சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதையடுத்து 2 பேருக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், 2 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வங்கிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வங்கிகளில் கையுறை, முகக்கவசம் அணிந்து சில ஊழியர்கள் மட்டும் பணிபுரிந்தனர். பொதுமக்கள் வங்கியின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வங்கி ஊழியர்களின் குடும்பத்தினர், வங்கியில் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு விரைவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
103 பேருக்கு கொரோனா
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 10-க்கு மேற்பட்ட ஊழியர்கள், லத்தேரியில் 4 வயது பெண்குழந்தை, கஸ்பாவில் 7 வயது ஆண்குழந்தை, 10 வயது பெண்குழந்தை, வேலூர் ஓல்டுடவுன் 10 வயது பெண்குழந்தை, குடியாத்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர், குடியாத்தம் நகைக்கடையில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 103 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,815 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 30,771 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், 1,815 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், 650 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 28,159 பேருக்கு தொற்று இல்லை. 1,152 பேர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 797 பேர்களின் சளிமாதிரி பரிசோதனை முடிவுகள் வர உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story