இன்று முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை


இன்று முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 July 2020 12:14 AM GMT (Updated: 5 July 2020 12:14 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

ஊட்டி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த 

மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை), வருகிற 12-ந் தேதி, 19-ந் தேதி, 26-ந் தேதி ஆகிய நாட்களில் முழு 

ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர்த்து வேறு எவ்வித தேவையில்லாத 

காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று 

மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. முழு ஊரடங்கால் காய்கறி, மளிகை, பழம், இறைச்சி போன்ற அனைத்து 

கடைகளும் மூடப்படுகின்றன. பால் விற்பனை கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருக்கும். பெட்ரோல் விற்பனை 

நிலையங்கள் மூடப்படுகிறது. ஆட்டோக்கள், வாகனங்கள் ஓடாது. இதையொட்டி 500 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு 

பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கூட்டம் அதிகரிப்பு

இந்த நிலையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க 

ஊட்டி நகருக்கு அதிகளவில் வந்தனர். ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தையில் 

காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பரவலாக 

மழை பெய்ததால், மைதானம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் மக்கள் சிரமத்திற்கு இடையே காய்கறிகளை வாங்கி 

சென்றனர். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் நின்று இருந்ததால், நோய் தொற்று பரவும் அபாயம் 

ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மீன், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் 

அலைமோதியது. ஊட்டி மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் சொந்த வாகனங்களில் ஊட்டிக்கு வந்திருந்தனர். 

இதனால் கமர்சியல் சாலை, லோயர் பஜார், ஏ.டி.சி. உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 

போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 

இருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க காந்தி மைதானத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி சந்தைக்கு பொதுமக்கள் 

ஏராளமானோர் வாகனங்களில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. காய்கறிகள், 

மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் இறைச்சிகளை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Next Story