பையனப்பள்ளியில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உலர் உணவுபொருட்கள் வழங்கும் பணி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


பையனப்பள்ளியில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உலர் உணவுபொருட்கள் வழங்கும் பணி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 July 2020 12:21 AM GMT (Updated: 5 July 2020 12:21 AM GMT)

பையனப்பள்ளியில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உலர் உணவுபொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, 

பையனப்பள்ளியில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உலர் உணவுபொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

உலர் உணவு பொருட்கள்

கிருஷ்ணகிரி தாலுகா பையனப்பள்ளி கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் உலர் உணவு பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு உணவு பொருட்களை வழங்கி பணியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதிலட்சுமி மற்றும் பையனப்பள்ளி அங்கன்வாடி பணியாளர் பூங்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் செயல்பட்டுவரும் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 89,306 குழந்தைகள், 12,735 கர்ப்பிணிகள், 12,327 பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அனுமதிக்கப்பட்ட அளவிலான சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் மூலமாக அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் 3 நாட்கள் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டு மதிய உணவிற்கு பதிலாக அரிசி, பருப்பு மற்றும் முட்டையை கடந்த 30-ந் தேதி வரை 7 கட்டங்களாக பயனாளிகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களால் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் உணவு பொருட்கள் பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. தகுதி உடைய அனைத்து பயனாளிகளுக்கும் அரசு அளிக்க கூடிய உணவு பொருட்களை தாமதமின்றி வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story