ஒரே நாளில் 10 குழந்தைகள் உள்பட 172 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,354 ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் உள்பட 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் உள்பட 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,354 ஆக உயர்ந்துள்ளது.
172 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அதனிடம் இருந்து மீட்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பொது மக்களிடையே சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. அதன்படி, நேற்று மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் 172 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
மருத்துவமனைகளில் அனுமதி
நேற்று பாதிக்கப்பட்டவர்களில், ஜமுனாமரத்தூர், பெரணமல்லூர், வேட்டவலம், போளூரில் தலா ஒருவர், கீழ்பென்னாத்தூர், புதுப்பாளையத்தில் தலா 2 பேர், செங்கம், ஆக்கூரில் தலா 3 பேர், தச்சூரில் 4 பேர், காட்டாம்பூண்டியில் 5 பேர், பெருங்கட்டூரில் 6 பேர், தெள்ளாரில் 11 பேர், எஸ்.வி.நகரத்தில் 16 பேர், நாவல்பாக்கத்தில் 20 பேர், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை நகராட்சி, கிழக்கு ஆரணி, வந்தவாசி பகுதிகளில் தலா 24 பேர் ஆவர். இதில் 10 வயதுக்கு கீழ் மட்டும் 10 குழந்தைகள் உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், பழகியவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களை தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2,534 ஆக உயர்வு
பாதிக்கப்பட்ட 172 பேரில், பெங்களூருவில் இருந்து 2 பேரும், சென்னையில் இருந்து 6 பேரும், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிதம்பரம், கோவையில் இருந்து தலா ஒருவரும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தவர்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் 82 பேருக்கு தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,354 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story