கிருஷ்ணா நதி நீரின் முதல் தவணை; ஆந்திர மாநில அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்
கிருஷ்ணா நதி நீரின் முதல் தவணை தண்ணீரை நடப்பு மாதம் திறக்க வலியுறுத்தி ஆந்திர மாநில அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு இம்மாதம் திறக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை,
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் கடந்த 1996-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் செய்து உள்ளது. அதன்படி ஆண்டு தோறும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் உள்ள பூண்டி ஏரிக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி.யும், 2-வது தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும் வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டாலும், போதிய மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு ஆண்டு கூட 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படவில்லை. நடப்பாண்டு முதல் தவணையை ஆந்திர மாநில அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கி உள்ளது.
ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை
இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 244 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 72, புழல் 2 ஆயிரத்து 742 (2.7 டி.எம்.சி.), செம்பரம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 33 (2 டி.எம்.சி.) உட்பட 5 ஆயிரத்து 91 மில்லியன் கன அடி (5 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த மாதம் கூடுதலாக தண்ணீர் திறக்க விடுத்த கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநில அரசு தண்ணீர் திறந்துவிட்டது. தற்போது இந்த ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீரை திறந்துவிடக்கோரி ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 244 மில்லியன கன அடி மட்டுமே உள்ளது. எப்படியும் இந்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம்.
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
இவ்வாறு உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story