ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர்


ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 5 July 2020 6:40 AM IST (Updated: 5 July 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தலைநகர் சென்னையில் நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து முன்வரிசை போர் வீரர்களாக களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

சென்னை ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பணி நேரம் முடிந்த பின்னர் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்கள் தியாகராயநகர், எழும்பூர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங் களில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல பிற மாவட்டங்களில் இருந்து கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை வந்துள்ள டாக்டர்களும் சிகிச்சை முடிந்த பின்னரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் பணி செய்து விட்டு தனிமைப்படுத்துவதற்காகவும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டல் களை சேர்ந்த ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல பணி நேரம் முடிந்து ஓட்டல்களுக்கு வரும் டாக்டர்களுக்கும், ஓட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ளும் டாக்டர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தியாகராயநகரில் உள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்கள், ஓட்டல் ஊழியர்களுக்கு நேற்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதேபோல சென்னையின் பிற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் டாக்டர்களுக்கும் சீரான இடைவெளியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தியாகராயநகர் ஓட்டல் ஊழியர்கள் கூறுகையில், எங்கள் ஓட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவுகளை கையால் தொடாமல் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு விதித்த பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் சேவையாற்றி வருகிறோம். எங்களுடைய ஊழியர்களுக்கும், டாக்டர்களுக்கும் தொடர்ச்சியாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story