தேனி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளரின் குழந்தை உள்பட 54 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 985 ஆக அதிகரிப்பு


தேனி மாவட்டத்தில்   சுகாதார ஆய்வாளரின் குழந்தை உள்பட 54 பேருக்கு கொரோனா   பாதிப்பு எண்ணிக்கை 985 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 1:12 AM GMT (Updated: 5 July 2020 1:12 AM GMT)

தேனி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளரின் 8 மாத குழந்தை உள்பட 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 985 ஆக அதிகரித்துள்ளது.

தேனி, 

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பிறமாவட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 பேரும் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் பாதிப்பு எண்ணிக்கை 931 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 985 ஆக அதிகரித்து உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் வாய்ப்பு உள்ளது.

8 மாத குழந்தை

நேற்று ஜெயமங்கலத்தை சேர்ந்த 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வடபுதுப்பட்டி பகுதிக்கான சுகாதார ஆய்வாளரின் தாய், தந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தை ஆகியோரும் அடங்குவர்.

அதுபோல், தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட நகராட்சி பகுதியில் 7 பேருக்கும், சின்னமனூரில் 2 பேருக்கும், க.புதுப்பட்டியில் 3 பேருக்கும், கம்பத்தில் பெண் உள்பட 5 பேருக்கும், வீரபாண்டியில் 3 பேருக்கும், உத்தமபாளையத்தில் 5 பேருக்கும், ஆனைமலையான்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதுபோல் போடியில் தம்பதி உள்பட 4 பேருக்கும், ஆண்டிப்பட்டியில் 2 சிறுவர்கள், தாய்-மகள் உள்பட 11 பேருக்கும், பழனிசெட்டிபட்டியில் 3 பேருக்கும், உப்பார்பட்டி, கூடலூர், அரண்மனைப்புதூர், வருசநாடு, அனுமந்தன்பட்டி, கோட்டைப்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இறந்த மூதாட்டியின் பரிசோதனை முடிவு

தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கான பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. காலையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மாலையில் இந்த தகவலை சுகாதாரத்துறையினர் மறுத்தனர். அந்த மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் அந்த மூதாட்டியின் மகன், பேரன் ஆகியோருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது அந்த பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story