மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்ட அழகிகுளத்திற்கு 50 ஆண்டுகளுக்குப்பிறகு வந்த காவிரி நீர்
மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்ட அழகிகுளத்திற்கு 50 ஆண்டுகளுக்குப்பிறகு காவிரி நீர் வந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சையை ஆண்ட மன்னர்களில் ராஜராஜசோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். அவர் தஞ்சை நகரின் நீர் தேவைக்காக 50-க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினார். இதில் அழகிகுளமும் ஒன்று. இந்த குளம் கருவேலமரங்கள் வளர்ந்தும், புதர் மண்டியும், குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்த குளத்தை பாம்பாட்டித்தெரு, கவாஸ்காரத்தெரு மக்கள் இணைந்து சுத்தம் செய்தனர். இதையடுத்து பொக்லின் எந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரினர். 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு ஆரம்பத்தில் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து தண்ணீர் வந்தது. நாளடைவில் இந்தபாதை அடைபட்டு விட்டது. இதையடுத்து கல்லணைக்கால்வாயில் இருந்து ராணி வாய்க்கால் மூலமும் குளத்திற்கு தண்ணீர் வரத்து இருந்துள்ளது. ஆனால் நாளடைவில் ராணிவாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் கடந்த 50 ஆண்டு காலமாக இந்த குளத்திற்கு கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் வரத்து நின்று விட்டது.
1,400 அடி நீள குழாய்கள்
இந்த நிலையில் இந்த அழகிகுளத்தை பராமரிப்பதற்காக அந்த பகுதி மக்கள் பராமரிப்பு குழுவை ஏற்படுத்தி கடந்த ஆண்டு தூர்வாரி குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைத்தனர். ஆங்காங்கே பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும், அங்கு மரக்கன்றுகளும் அமைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு இந்த குளத்தில் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினர். தற்போது இந்த பகுதி பொதுமக்கள் கல்லணைக்கால்வாயில் இருந்து காவிரி நீரை கொண்டு வர முடிவு செய்தனர். இதற்காக 1,400 அடி நீளத்திற்கு குழாய்களை வாங்கி குடியிருப்புகள் வழியாக ஆபிரகாம் பண்டிதர் சாலையை கடந்து குளத்திற்கு தண்ணீரை கொண்டு சென்றனர்.
50 ஆண்டுகளுக்குப்பிறகு......
நேற்று முன்தினம் இரவு முதல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. 50 ஆண்டுகளுக்கு பிறகு குளத்திற்கு காவிரி நீர் கொண்டு வரப்பட்டதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் மூலம் கவாஸ்காரதெரு, பாம்பாட்டித்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக உயரும். இன்னும் ஒரு வாரத்திற்குள் குளம் நிரம்பும் என எதிர்பார்க் கப்படுகிறது.
Related Tags :
Next Story