திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்காத 25 போலீசாருக்கு பயிற்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி


திருச்சி மாநகரில்  பொதுமக்களிடம் நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்காத 25 போலீசாருக்கு பயிற்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி
x
தினத்தந்தி 5 July 2020 11:37 AM IST (Updated: 5 July 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்காத 25 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறினார்.


திருச்சி, 


திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

கண்காணிப்பு குழுக்கள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ளும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த குழுவினர் மூலம் 65 வார்டுகளுக்கும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுவினர் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். பொதுமக்கள் மற்றும் போலீசார் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் போலீசாருக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மக்களுடன் நட்புறவை மேம்படுத்தாதவர்களுக்கு தனியே பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களை பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

25 போலீசாருக்கு பயிற்சி

திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் கோபப்பட்டு நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்காத 25 போலீசாருக்கு பொதுமக்களுடன் நடந்து கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டு வருகிறது. பணியில் இருக்கும் போலீசார் முககவசம் மற்றும் கையுறை அணிந்து தனிமனித இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும். போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசாருக்கு நோய்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story