பாதுகாப்பு இன்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ள சாலையோர காய்கறி கடைகள் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு
பாதுகாப்பு இன்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் பெரம்பலூர் உழவர் சந்தை அருகே சாலையின் இருபுறங்களிலும் வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகள் கடைகள் அமைத்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்காக பெரம்பலூரில் வடக்கு மாதேவி சாலையில் உள்ள உழவர் சந்தை மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே ஸ்ரீ மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை நகராட்சியால் மூடப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வியாபாரிகளும், விவசாயிகளும் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக பெரம்பலூர் உழவர் சந்தை அருகே உள்ள கோவில் இடமும், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் குடியிருப்பு அருகே உள்ள இடமும் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது.
அந்த இடங்களில் வியாபாரிகள், விவசாயிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளை அமைத்து, காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தீயணைப்பு நிலைய வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு அருகே காய்கறி கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டது.
கோவில் இடத்தில் காய்கறி கடைகள்
இதனால் அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளும், விவசாயிகளும் உழவர் சந்தை அருகே உள்ள கோவில் இடத்திலேயே கடைகளை அமைத்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வியாபாரம் செய்து வந்தனர். இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்த தொழிலாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூர் உழவர் சந்தை அருகே கோவில் இடத்தில் காய்கறி கடைகள் வைக்க கூடாது என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து நகராட்சியால் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் பலர் காய்கறிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
உழவர் சந்தை அருகே சாலையோரத்தில்...
இந்நிலையில் பெரம்பலூர் உழவர் சந்தை அருகே உள்ள சாலையில் இருபுறமும் வியாபாரிகளும், விவசாயிகளும் எவ்வித பாதுகாப்பு இன்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடர்ந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் வியாபாரிகள், விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அருகே, அருகே அமர்ந்தும் கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா வேகமாக பரவும் சூழ்நிலையில் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சாலையில் நின்று கொண்டு தான் காய்கறிகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.
அசம்பாவித சம்பவங்கள்
மேலும் உழவர் சந்தை அருகே சாலை இருப்பதற்கான அடையாளம் இல்லாமல் போனது. மேலும் அந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. தற்போது அந்த சாலையில் எதிரே வாகனம் வந்தால் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காய்கறி கடைகளை உழவர் சந்தை அருகே உள்ள கோவில் இடத்தில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story